"சுரகும” ஓய்வூதியத் திட்டம்

சுரகும பற்றி

18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 59 வயதுக்கு மேற்படாத அரசாங்கத்தின் ஓய்வூதியத்துடன் கூடிய தொழிலில் ஈடுபடாத நபர்களின் பொருட்டு நடைமுறைப்படும் திட்டமாகும். இதன் கீழ், அங்கத்தவராக விரும்புபவருக்கு அவரது தேவை மற்றும் பங்களிப்புகளை செலுத்தும் திறனுக்கு ஏற்ப எந்தவொரு தொகைக்கும் ஓய்வூதியம் தயாரிக்கும் திறன் உள்ளது.

1.1. “சுரகும” திட்டத்தின் நலன்கள்

1.1. மாதாந்த ஓய்வூதியம்

  • i. பங்களிப்பாளர் 60 வயதைப் பூர்த்தி செய்யும் போது, அவர் ஒப்புக்கொண்ட ஓய்வூதியத்திற்கு ஏற்ப செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக (100%) செலுத்தியிருந்தால், 60 வயது முதல் வாழ்நாள் முழுவதும் முழுமையான ஓய்வூதியம் மாதாந்தம் வழங்கப்படும்.
  • ii. பங்களிப்பாளர் 60 வயதைப் பூர்த்தி செய்யும் போது, அவர் ஒப்புக்கொண்ட ஓய்வூதியத்திற்கு ஏற்ப செலுத்த வேண்டிய தொகையில் 25% இற்கும் அதிகமாக செலுத்தியிருந்தால், கணக்கிலுள்ள தேறிய மீதியின் (Net balance) அடிப்படையில் சீரமைக்கப்பட்ட (Adjusted) ஓய்வூதியமொன்று பங்களிப்பாளரின் விருப்பத்திற்கேற்ப மாதாந்தம் வழங்கப்படும்.

1.2. வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியம் கிடைத்தல்

1.2.1. பங்களிப்பாளர் 60 வயதிற்கு முன்னர் இறக்கும் சந்தர்ப்பத்தில்

பங்களிப்பாளரின் இறப்பு 60 வயதிற்குட்பட்ட காலப்பகுதியில் நிகழ்ந்தால், இறப்புக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக தேறிய பங்களிப்புத் தொகையைப் பெற்றுக்கொள்ள அல்லது கீழ்க்காணும் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.

  • i. பங்களிப்பாளரின் இறப்பு நிகழும் போது, பங்களிப்பாளரால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஓய்வூதியத்திற்காக செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் செலுத்தியிருந்தால், பங்களிப்பாளரின் 60 வயது முதல் 80 வயது வரையான காலப்பகுதிக்கு வாழ்க்கைத் துணை அல்லது பெயரிடப்பட்ட வாரிசு மாதாந்த ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • ii. பங்களிப்பாளரின் இறப்பு நிகழும் போது, பங்களிப்பாளர் செலுத்த வேண்டிய முழுத் தொகையில் 75% இற்கும் அதிகமாக செலுத்தியிருந்தால், சீரமைக்கப்பட்ட ஓய்வூதியத்தை அல்லது மீதமுள்ள தவணைப் பணத்தைச் செலுத்தி ஒப்புக்கொள்ளப்பட்ட முழுமையான ஓய்வூதியத்தை பங்களிப்பாளரின் 60 முதல் 80 வயது வரையான காலப்பகுதிக்கு வாழ்க்கைத் துணை அல்லது பெயரிடப்பட்ட வாரிசு மாதாந்தம் பெற்றுக்கொள்ள முடியும்.
  • iii. பங்களிப்பாளரின் இறப்பு நிகழும் போது, பங்களிப்பாளர் செலுத்த வேண்டிய முழுத் தொகையில் 25% இற்கும் 75% இற்கும் இடைப்பட்ட தொகையைச் செலுத்தியிருந்தால், செலுத்த வேண்டிய தொகையில் 75% அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதம் வரையான மீதமுள்ள தவணைப் பணத்தைச் செலுத்தி, பங்களிப்பாளரின் 60 முதல் 80 வயது வரையான காலப்பகுதிக்கு வாழ்க்கைத் துணை அல்லது பெயரிடப்பட்ட வாரிசு மாதாந்த ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல் அல்லது
  • iv. இத்தகைய சந்தர்ப்பத்தில் பங்களிப்பாளரின் வாரிசுகளுக்கு உரித்தான தேறிய பங்களிப்புத் தொகையைப் பயன்படுத்தி, வாழ்க்கைத் துணை அல்லது வாரிசின் பெயரில் ஒரு ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பித்து, அவர்/அவள் பெயரில் அந்த ஓய்வூதியத் திட்டத்தைப் பேணி சாதாரண முறையில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உரித்தான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளல்.
1.2.2. பங்களிப்பாளர் 60 முதல் 80 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் இறக்கும் சந்தர்ப்பத்தில்

பங்களிப்பாளர் ஒரு ஓய்வூதியதாரராக (60 முதல் 80 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில்) 80 வயதைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர் உயிரிழந்தால்,

  • i. வாழ்க்கைத் துணை அல்லது பங்களிப்பாளரால் பெயரிடப்பட்ட ஒருவருக்கு, பங்களிப்பாளருக்கு 80 வயது ஆகும் வரை மாதாந்த ஓய்வூதியம் உரித்தாகும்.
  • ii. வாழ்க்கைத் துணை அல்லது பெயரிடப்பட்ட ஒருவர் இல்லாவிடின், பங்களிப்பாளரின் பெயரில் வைப்புச் செய்யப்பட்டுள்ள தேறிய பங்களிப்புத் தொகை மற்றும் வட்டியினைப் பங்களிப்பாளரின் சட்டபூர்வ வாரிசுகள் மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.

1.3. இறப்புக் கொடுப்பனவு (Death Gratuity)

  • i. ஓய்வூதியம் பெறுவதற்கு முன்னர் (60 வயதிற்கு முன்னர்) இறக்கும் பங்களிப்பாளர் ஒருவரின் இறுதிச் சடங்குச் செலவுகளை ஈடுசெய்வதற்காக, எந்தவொரு வயதுப் பிரிவினருக்கும் ரூபா 100,000.00 தொகை வழங்கப்படும்.

1.4. நிரந்தரப் பகுதி அளவிலான இயலாமைக்கான நன்மைகள் (Permanent Partial Disability Benefits)

  • i. ரூபா 100,000.00 தொகை பகுதி அளவிலான இயலாமைக் கொடுப்பனவாக (Partial disability gratuity) வழங்கப்படும்.
  • ii. மேற்கண்ட கொடுப்பனவுத் தொகையுடன் தேறிய பங்களிப்புத் தொகையையும் வட்டியுடன் பெற்றுக்கொண்டு திட்டத்திலிருந்து விலகுவதற்கான அல்லது கொடுப்பனவுத் தொகையை மாத்திரம் பெற்றுக்கொண்டு தொடர்ச்சியாக தவணைப் பணத்தைச் செலுத்தி 60 வயது முதல் ஒப்புக்கொள்ளப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.
  • iii. இயலாமை ஏற்படும் சந்தர்ப்பத்தில் செலுத்த வேண்டிய தொகையில் 25% இற்கும் அதிகமாக செலுத்தியிருந்தால், இனிமேல் தவணைப் பணத்தைச் செலுத்தாமல் பங்களிப்பாளரின் 60 வயது முதல் வாழ்நாள் முழுவதும் கணக்கிலுள்ள மீதியின் அடிப்படையில் சீரமைக்கப்பட்ட (Adjusted) ஓய்வூதியமொன்றைப் பங்களிப்பாளரின் விருப்பத்திற்கேற்ப மாதாந்தம் பெற்றுக்கொள்ள முடியும்.

1.5. முழுமையான இயலாமைக்கான நன்மைகள் (Total Disability Benefits)

  • i. ஓய்வூதியம் பெறுவதற்கு முன்னர் பங்களிப்பாளர் நிரந்தரமான முழுமையான இயலாமைக்கு (Permanent total disability) உள்ளானால், ஒரே தடவையில் செலுத்தப்படும் ரூபா 500,000.00 முழுமையான இயலாமைக் கொடுப்பனவும் (Total disability gratuity), இயலாமை ஏற்பட்ட திகதி முதல் வாழ்நாள் முழுவதும் செலுத்தப்படும் மாதாந்த ஓய்வூதியமும் பெற்றுக்கொள்ள முடியும்.

1.6. பிள்ளைகளுக்கான மேலதிக நிதி நன்மைகள் காப்பீடு (Additional Financial Benefit Cover for Children)

பங்களிப்பாளர்களின் பிள்ளைகள் அல்லது பங்களிப்பாளர்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ள (Guardianship) பிள்ளைகள் நன்மையடையக்கூடிய வகையிலான மேலதிக காப்பீடொன்றை (Optional Cover) ஓய்வூதியத் திட்டத்துடன் இணைத்துக்கொள்வதற்காக பின்வருமாறு அறிமுகப்படுத்தப்படுகிறது.

1.6.1. உள்ளடங்கியுள்ள நன்மைகள்

இந்த மேலதிக காப்பீட்டின் கீழ், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளை ஈடுசெய்தல் உட்பட எந்தவொரு நிதித் தேவைக்காகவும் நிதிக் கொடுப்பனவொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகளின் எல்லையை பங்களிப்பாளரின் செலுத்தும் திறனுக்கேற்ப தீர்மானிக்க முடியும். அதற்கமைய,

  • i. பிள்ளைகளின் 18 முதல் 29 வயது வரையான காலப்பகுதிக்குள், தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக பெற்றுக்கொள்ள முடியும். அதற்கமைய, நன்மைகளைப் பெற ஆரம்பிக்கும் வருடம் முதல் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு வருடாந்தம் அதிகரிக்கும் மாதாந்த நன்மையொன்று வழங்கப்படும்.
  • ii. பிள்ளைகளின் 18 முதல் 29 வயது வரையான காலப்பகுதிக்குள், தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு வருடாந்தக் கொடுப்பனவாக பெற்றுக்கொள்ள முடியும். அதற்கமைய, நன்மைகளைப் பெற ஆரம்பிக்கும் வருடம் முதல் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு வருடாந்தம் அதிகரிக்கும் நன்மையொன்று வழங்கப்படும்.
  • v. பிள்ளைகளின் 18 முதல் 29 வயது வரையான காலப்பகுதிக்குள், ஒரே தடவை வழங்கப்படும் கொடுப்பனவாக (Lump sum) பெற்றுக்கொள்ள முடியும்.
  • vi. மாதாந்தம், வருடாந்தம் அல்லது ஒரே தடவை வழங்கப்படும் தொகையாக என எந்தவொரு வடிவத்திலாவது நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் இந்தக் காப்பீட்டைப் பெற்றுக்கொண்ட பங்களிப்பாளர், பின்னர் அவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்ட நன்மைகளை வேறொரு வடிவத்தில் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தால், கணக்கின் மீதிக்கேற்ப (Account balance) சீரமைப்புகள் செய்யப்பட்டு நன்மைகளைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
1.6.2. பங்களிப்புக்கான தகைமைகள்
  • i. சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் ஓய்வூதியத் திட்டமொன்றின் பங்களிப்பாளர்களுக்கு மாத்திரமே, அவர்களின் பிள்ளைகள் அல்லது அவர்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்காக இந்தக் காப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • ii. பிள்ளையின் வயது அடுத்த பிறந்த தினத்திற்கு 1 முதல் 15 வயதிற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
1.6.3. தவணைப் பணம்
  • i. இதற்காக பங்களிப்பாளர்களால் மேலதிக தவணைப் பணமொன்று செலுத்தப்பட வேண்டும். மேலதிக காப்பீட்டை தேவைக்கேற்ப எந்தவொரு பெறுமதியிலும் மற்றும் பிள்ளைகளுக்காக தனித்தனியாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
  • ii. பிள்ளைக்கு 18 வயதாகும் போது எதிர்பார்க்கப்படும் நன்மைப் பெறுமதியின் அடிப்படையில் தவணைப் பணம் அறவிடப்படும். பிள்ளையின் 18 முதல் 29 வயது வரை நன்மைகளைக் கோரி விண்ணப்பிக்க முடியும்.
  • iii. பங்களிப்புச் செயலிலுள்ள (Active) நிலையில், பொறுப்பாளரின் இறப்பு அல்லது நிரந்தரமான முழுமையான இயலாமையின் போது, தவணைப் பணம் செலுத்துதல் நிறுத்தப்படுவதுடன், எதிர்காலத் தவணைப் பணம் செலுத்தாமலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட நன்மைகளை அவ்வாறே பெற்றுக்கொள்ள முடியும்.
  • iv. மேலதிக காப்பீட்டிற்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் சந்தர்ப்பத்தில், அதுவரை செலுத்தப்பட்ட தேறிய பங்களிப்புப் பணங்கள் மீளளிக்கப்படும். தாமத வட்டி (Default interest) இன்றி, குறைந்தபட்சம் ரூபா 50,000 அல்லது மொத்தத் தவணைப் பணத்தில் 25% செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • v. பிள்ளைக்கு 18 வயது வரை தவணைப் பணத்தைச் செலுத்த முடியும்.
  • vi. இந்தக் காப்பீட்டைப் பெற்றுக்கொண்ட பங்களிப்பாளர் ஒருவர் தவணைப் பணத்தைச் செலுத்தும் போது, எப்போதும் பங்களிப்பாளரின் ஓய்வூதியத் திட்டத்திற்குரிய தவணைப் பணத்தை ஈடுசெய்வதற்கே முன்னுரிமை வழங்கப்படும்.
  • vii. பங்களிப்பாளரின் ஓய்வூதிய உரிமையை உறுதிசெய்வதற்காக மேலதிக காப்பீட்டிற்காகச் செய்யப்பட்ட கொடுப்பனவுகளை, தேவையான சந்தர்ப்பங்களில் பங்களிப்பாளரின் கோரிக்கையின் பேரில் அவரது ஓய்வூதியத் திட்டக் கணக்கில் வரவு வைப்பதற்கு (Credit) முடியும்.

7. ஓய்வூதியத் திட்டத்திற்கான புதிய தவணைப் பணக் கொடுப்பனவு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல்

பங்களிப்பாளர்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கான தவணைப் பணத்தைப் பின்வரும் முறைகளின்படி செலுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

  • i. ஒரே தடவையில் பணம் செலுத்துதல்.
  • ii. மாதாந்தத் தவணை முறையில் செலுத்துதல் (பங்களிப்பைப் பெற்ற திகதி முதல் 59 வயதைப் பூர்த்தி செய்யும் வரை).
  • iii. காலாண்டுத் தவணை முறையில் செலுத்துதல் (பங்களிப்பைப் பெற்ற திகதி முதல் 59 வயதைப் பூர்த்தி செய்யும் வரை).
  • iv. இரண்டு வருடங்களுக்குள் மாதாந்த (24), காலாண்டு (8) மற்றும் வருடாந்த (2) தவணை முறையில் செலுத்துதல்.
  • v. மூன்று வருடங்களுக்குள் மாதாந்த (36), காலாண்டு (12) மற்றும் வருடாந்த (3) தவணை முறையில் செலுத்துதல்.
  • vi. நான்கு வருடங்களுக்குள் மாதாந்த (48), காலாண்டு (16) மற்றும் வருடாந்த (4) தவணை முறையில் செலுத்துதல்.
  • vii. ஐந்து வருடங்களுக்குள் மாதாந்த (60), காலாண்டு (20) மற்றும் வருடாந்த (5) தவணை முறையில் செலுத்துதல்.
  • viii. பத்து வருடங்களுக்குள் மாதாந்த (120), காலாண்டு (40) மற்றும் வருடாந்த (10) தவணை முறையில் செலுத்துதல்.
  • ix. பதினைந்து வருடங்களுக்குள் மாதாந்த (180), காலாண்டு (60) மற்றும் வருடாந்த (15) தவணை முறையில் செலுத்துதல்.